வேளாண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
தமிழக சட்டமன்றத்தில் 2025–2026 ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள், தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் 600 க்கும் மேற்பட்ட பட்டயதாரிகள் படிப்பை நிறைவு செய்கின்றனர் என்றும், இவர்களின் தொழில்நுட்ப திறமைகள் உழவர்களுக்கு உதவியாக இருக்கும் வகையில் மொத்தம் 1000 உழவர் நல சேவை மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இம்மையங்கள் ஒவ்வொன்றும் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவில் அமைக்கப்படுகின்றன. இதற்கான 30% மானியம் (ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை) வழங்கப்படவுள்ளது. மொத்தமாக ரூ.42 கோடி மாநில அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மையங்களின் முக்கிய சேவைகள்
- விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடுபொருட்கள் விற்பனை.
- பயிர்களில் ஏற்படும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்த ஆலோசனை.
- நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான வழிகாட்டுதல்.
- வேளாண் உற்பத்தி மதிப்புக்கூட்டுதல் குறித்த ஆலோசனை.
திட்டத்தின் சிறப்புகள்
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 மையங்கள் அமைக்கப்படுகின்றன.
- இத்திட்டத்தில் 20–45 வயதிற்குள் உள்ள வேளாண்/தோட்டக்கலை/வேளாண்மை பொறியியல் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் பங்கேற்கலாம்.
- மையங்களை வெற்றிகரமாக நடத்துபவர்களுக்கு உழவர் நலத்துறையின் அனைத்து உரிமைகளும் வழங்கப்படும்.
- வங்கிகளில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற்று, அதன் பின்பு மானிய உதவிக்காக tnagrisnet.tn.gov.in/KaviaDP/register என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதிக்குட்பட்ட வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.