காஞ்சிபுரம், ஆக.12:
கூட்டுறவுச்சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னையை தலைமையிடமாக கொண்டு மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்களில் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் காலியாகவுள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 377 காலிப்பணியிடங்கள், மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் அலுவலக கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 49 காலிப்பணியிடங்களுக்கும் ஆட்களைத் தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு தகுதியான போட்டித் தேர்வர்கள் பயனடையும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக நேரடி பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தேர்வுகள் வரும் ஆக.18 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விபரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன் பெறுமாறும் ஆட்சியர் கலைச்செல்வி மோகனின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.