பொதுமக்கள் நிலஆவணங்களை எளிதில் பெறும் வகையில், தமிழ்நாடு அரசு நில ஆவணங்களை ஆன்லைனில் வழங்கி வருகிறது. இந்த சேவையின் அடுத்த கட்டமாக, 1864 முதல் 1897 வரை உள்ள பழைய செட்டில்மென்ட் ரிஜிஸ்டர் மற்றும் 1861 முதல் 1940 வரை உள்ள இனாம் உண்மை பதிவேடு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை www.digitamiinsduarchives.gov.in என்ற ஆவணக்காப்பக இணையதளத்தில் பார்வையிடலாம்.
பத்திரப்பதிவு துறையின் சேவைகளில் பொதுமக்களுக்கு எளிமை ஏற்படுத்த பல்வேறு மாற்றங்களை அரசு செய்து வருகிறது. தற்போது பதிவுத்துறை இணையதளத்தின் மூலம் வில்லங்கச் சான்றிதழ், பத்திரப்பதிவு நகல் போன்ற ஆவணங்களை ஆன்லைனில் தேடிப் பெறும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வீட்டிலிருந்தே நில உரிமை, வில்லங்கங்கள் உள்ளதா என அறிந்து கொள்ள முடிகிறது.
தற்போது 30 முதல் 40 ஆண்டுகளுக்குள் உள்ள ஆவணங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் 1980-களுக்கு முந்தைய பழைய ஆவணங்கள் பெரும்பாலும் கையால் எழுதப்பட்டவையாகும். அவை படிப்படியாக டிஜிட்டல் வடிவமைப்பில் மாற்றப்பட்டு வருகின்றன. ஆன்லைனில் சுருக்கமான விவரங்களை பார்க்க முடிந்தாலும், முழுமையான நகல் வேண்டுமெனில் சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற 50வது தேசிய ஆவணக்காப்பாளர்கள் குழுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் பங்கேற்று, ஆன்லைன் ஆவண சேவையை தொடங்கி வைத்தார்.
இந்த கூட்டத்தில் தேசிய ஆவணக்காப்பக தலைமை இயக்குநர் சஞ்சய் ரஸ்தோகி, தமிழ்நாடு உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பொ.சங்கர், தமிழ்நாடு ஆவணக்காப்பக ஆணையர் ஹர்சஹாய் மீனா உள்ளிட்டோர் மற்றும் 20 மாநில ஆவணக்காப்பக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இவ்விழாவில் அமைச்சர் கோ.வி.செழியன்,
- “ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக 1857-ம் ஆண்டுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் தியாகங்கள்”
- “மைசூர் போர்களும் தமிழ்நாடு கைப்பற்றப்பட்ட முறைகளும்”
என்ற இரண்டு புதிய நூல்களை வெளியிட்டார்.