தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் சேலம் மாவட்டம், இரும்பாலை சாலையில் செயல்படும் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பாரம்பரிய இசைக் கலைகளில் மூன்று ஆண்டு முழுநேர பயிற்சி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். இரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட இசைப்பள்ளி சேலம் இரும்பாலை சாலை, ஆவின் பால் பண்ணை எதிரில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு கட்டணம் இல்லை
பயிற்சி வகுப்புகள் வாரநாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். பயிற்சிக்கு கட்டணம் இல்லை. சேர்க்கைக் கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத்தப்பட வேண்டும். மாணவ, மாணவியருக்கு இலவச பேருந்து பயணசலுகை அளிக்கப்படுகிறது.
மாதந்திர கல்வி உதவித்தொகை
மேலும், இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக மாதந்திர கல்வி உதவித்தொகை ரூ.1,000 ஆக உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளது. பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இச்சான்றிதழ் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புக்கு இணையானது என தமிழ்நாடு அரசு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தமிழ் (பகுதி 1), ஆங்கிலம் (பகுதி2) ஆகிய பாடங்களைப் பயின்று வருகின்றனர். இசைப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்பை தடையின்றி பெரும் வகையிலும், இடைநிற்றலை தவிர்க்கும் வகையிலும், இசை குறித்த பட்டறிவை ஊக்குவிக்கும் வகையிலும், வேலை வாய்ப்பைப் பெறும் நோக்கிலும், அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும்
பத்தாம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழிப் பாடங்களில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் பத்தாம் வகுப்பில் பகுதி 3 இல் உள்ள முதன்மை பாடங்களான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்குப் பதிலாக இசைப்பள்ளி பாடங்களில் முதன்மைப் பாடம், துணைப்பாடம் மற்றும் வாய்மொழித் தேர்வு, இசையியல் பாடங்கள் (எழுத்து தேர்வு) ஆகியவற்றை சிறப்பு நிகழ்வாக பகுதி –3 இன் முதன்மை பாடங்களாகக் கருதி அவர்களின் இசைப்பள்ளி தேர்ச்சி சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்படும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு இணைத் தன்மை வாய்ந்தது என அரசு தேர்வுத்துறை சான்றிதழ் வழங்கவுள்ளது.
பாடத்திட்டங்கள் - அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ்
அதேபோல், பத்தாம் வகுப்பை முறையாக பள்ளிகளில் பயின்றோ அல்லது தனித்தேர்வராக எழுதியோ அரசு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் அல்லது தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம் (என்ஐஓஎஸ்) வாயிலாக தேர்ச்சி பின்னர் நேரடியாக இசைப்பள்ளிகளில் 3 ஆண்டு படித்து இசைப்பள்ளி பாடங்களில் முதன்மை பாடம் (தாள்–1), துணைப் பாடம் (2–தாள்), துணைப் பாடம் மற்றும் வாய்மொழித் தேர்வு, மேல்நிலை இசையியல் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று 12-ஆம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெரும் பட்சத்தில் அவர்களின் இசை பள்ளி தேர்ச்சி சான்றிதழை 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (கலை மற்றும் தொழில் பிரிவுகளில் மட்டும்) தேர்ச்சிக்கு இணைத்தன்மை வாய்ந்தது என அரசு தேர்வுகள் இயக்ககம் சான்றிதழ் வழங்கவுள்ளது.
மொழி தேர்வுகள் தங்களுக்கு தேவை இல்லை என கருதும் மாணவர்களுக்கு தொடர்புடைய பிரிவில் அரசு தேர்வு துறையால் வழங்கப்பட்டு வரும் மாவட்ட இசை பள்ளி தேர்ச்சி சான்றிதழை தொடர்ந்து வழங்கலாம் என அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி விவரங்கள்:
கல்வித்தகுதியான நாதஸ்வரம், தவில், தேவாரம் ஆகிய கலைப்பிரிவுகளில் சேர்வதற்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மற்ற கலைப்பிரிவுகளில் சேர்வதற்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு சான்றிதழ் பெற 8-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கலைத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள், வேறு துறையில் பட்டம் பெற்றவர்கள், கல்லூரி படிப்பை தொடர இயலாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் சேர்ந்து பயிலலாம்.
விண்ணப்ப முகவரி:
இசைப்பள்ளியில் சேர்க்கைக்கு விண்ணப்பம் பெற தலைமையாசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, ஆவின் பால்பண்னை எதிரில், தளவாய்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி-அஞ்சல், சேலம் – 636302 எனும் முகவரியில் நேரிலோ அல்லது சுயமுகவரியிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, 0427-2906197, 94435-39772, 99947-38883 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயிலுவதற்கு உரிய வாய்ப்பினை சேலம் மாவட்ட இளையோர் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
Salem District Government Music School Certificate Equivalent to 10th and 12th Standard – Government Approval