காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2024-25 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு “உயர்வுக்கு படி” என்ற உயர்கல்வி சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட அளவில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
உடனடி தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வு எழுதாதவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள், கல்லூரி சேர்க்கை, பல்வேறு தொழில் பாதைகள், கல்விக் கடன் பெறுதல் போன்ற தகவல்களை வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
🔹 முதல் கட்டம் – காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் வட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 21.08.2025 காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.
🔹 இரண்டாம் கட்டம் – திருப்பெரும்புதூர், குன்றத்தூர் வட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, 26.08.2025 காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருப்பெரும்புதூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் துறைசார் வல்லுநர்கள் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். மேலும், தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்கள், ஐடிஐ, பாலிடெக்னிக், அறிவியல் & கலைக்கல்லூரி, பொறியியல் மற்றும் நர்சிங் கல்லூரிகளின் தகவல் ஸ்டால்களும் அமைக்கப்படுகின்றன.
மாணவர்கள் உயர் கல்வியில் சேர்ந்து பயன் பெறும் வகையில், தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளனர்.